
ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதனையடுத்து இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி இன்று (பிப்ரவரி 14) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் நிஷான் மதுஷ்கா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிஷங்கா 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மதுஷ்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் இணைந்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்துடன், சிறப்பாக விளையாடி தங்களுடைய அரைசதங்களையும் பூர்த்தி செய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்களை எடுத்திருந்த நிஷான் மதுஷ்கா தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதையடுத்து குசால் மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்த அணியின் கேப்டான் சரித் அசலங்கா இப்போட்டியிலும் சிறப்பாக விளையாடினார்.