
இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நியூசிலாந்தை பந்துவீச அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கருணரத்னே 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான பதும் நிஷங்காவும் 27 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த அணியின் மூத்த வீரர்கள் தினேஷ் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தினர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர்.
மேற்கொண்டு இப்போட்டியில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தினேஷ் சண்டிமால் 30 ரன்களிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்களுடனும் என நடையைக் கட்டினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தனஞ்செயா டி சில்வாவும் 11 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.