
சையத் முஷ்டாக் அலி கோப்பை உள்ளூர் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தமிழ்நாடு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு பாபா இந்திரஜித் - ஜெகதீசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் இந்திரஜித் 25 ரன்னில் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய பூபதி குமாரும் 28 ரன்னுடன் நடையைக் கட்டினார். அதேசமயம் அணியின் மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய கையோடு, 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷாருக் கான் - விஜய் சங்கர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய் ஷாருக் கான் 39 ரன்களைச் சேர்க்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விஜய் சங்கர் 4 சிக்ஸர்களுடன் 42 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் தமிழ்நாடு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்களைச் சேர்த்தது. பரோடா தரப்பில் மெரிவாலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.