
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் இ பிரிவுக்கான லீக் போட்டியில் மும்பை மற்றும் மஹாராஷ்டிரா அணிகள் பலப்பரீட்ச நடத்தின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மஹாராஷ்டிரா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய மஹாராஷ்டிரா அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அர்ஷின் குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், அர்ஷின் குல்கர்னியும் 19 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கியா ராகுல் திரிபாதி 16 ரன்களுக்கும், அங்கித் பாவ்னா 7 ரன்களுக்கும், சத்யஜீத் மற்றும் திவ்யாங் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த அஸிம் காஸி மற்றும் நிகில் நாயக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அஸிம் காஸி 32 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிகில் நாயக் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.