
இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியானது சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தியதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் நிலையில், முத்தரப்பு ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்தில் உள்ளார்.
இதுதவிர்த்து முத்தரப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமாரி அத்தபத்து 2 இடங்கள் முன்னேறி 7ஆம் இடத்தையும், இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5 இடங்கள் முன்னேறி 15ஆம் இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் சோலே ட்ரையான் 9 இடங்கள் முன்னேறி 18ஆம் இடத்தையும், இந்திய அணியின் தீப்தி சர்மா 13 இடங்கள் முன்னேறி 32ஆம் இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் 8 இடங்கள் முன்னேறி 32ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.