
நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என்று தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் பரவலாக கருத்து தெரிவித்து வந்தார்கள். ஆனால் தொடர் ஆரம்பித்த முதல் நாளிலேயே எல்லாம் இந்த கருத்துக்கணிப்புக்கு எதிராக நடக்க ஆரம்பித்தது. முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு நாட்கள் ஆட்டத்தை கையில் வைத்திருந்த ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நாள் துவக்கத்தில் 48 ரண்களுக்கு 9 விக்கெட்டுகளை விட்டு ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி இனி இழப்பதற்கு வாய்ப்பே கிடையாது.
மேலும் தொடர்ச்சியாக நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் இந்திய அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. அடுத்து நடக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றை வென்றாலோ இரண்டையும் சமன் செய்தாலோ, இந்திய அணி தொடர்ச்சியாக நான்கு முறை தொடரை வென்ற சாதனையை இந்தத் தொடரில் படைக்கும்.