ஓவல் டெஸ்டில் குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும் - சௌரவ் கங்குலி!
நாம் நமது பந்துவீச்சை மேம்படுத்தினால், நிச்சயம் ஓவல் டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பெற முடியும் என்று நம்புகிறேன் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Sourav Ganguly: ஓவலில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை விளையாட வைக்குமாறு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி இரண்டிலும், இந்திய அணி ஒன்றிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும்.இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் இரு அணிகளின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை விளையாட வைக்குமாறு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டிற்கான இந்திய அணியில் குல்தீப் யாதவை விளையாட வைத்து, சரியான பந்துவீச்சு தாக்குதலை கௌதம் கம்பீர் தேர்வு செய்ய வேண்டும் என நினைக்கிறேன். நாம் தொடர்ந்து இதே போல் பேட்டிங் செய்தால், இந்த போட்டியில் வெற்றி பெறலாம். இது ஒரு இளம் அணி, மேலும் இந்த அணியை மீண்டும் கட்டமைக்கப்படுவதால், அவர்களுக்கு நாம் சிறிது நேரம் கொடுக்க வேண்டும்.
மேலும் நான்காவது இன்னிங்ஸில் அவர்கள் பேட்டிங் செய்து 400க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த விதத்தைப் பார்க்கும் போது, லார்ட்ஸ் டெஸ்டில் தோல்வியடைந்ததற்கு இந்தியா வருத்தப்படும். ஏனெனில் மான்செஸ்டரில் ஐந்தாவது நாளில் அவர்கள் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஆனால் லாட்ஸில் 190 ரன்களை எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியதே அதற்கு காரணம். நீண்ட காலத்திற்குப் பிறகு, பல இந்திய வீரர்கள் வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் இவ்வளவு ரன்கள் எடுத்துள்ளனர்.
இது எனக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒன்று, மேலும் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும். இந்த இளம் வீரர்கள் நாட்டிற்காக நீண்ட காலம் விளையாடுவார்கள், மேலும் இங்கிலாந்தில் அவர்களின் செயல்திறன் நிச்சயமாக அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தரும். அதனால் நாம் நமது பந்துவீச்சை மேம்படுத்தினால், நிச்சயம் ஓவல் டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பெற முடியும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், நாராயண் ஜெகதீசன்.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now