
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவிலும் பாகிஸ்தான் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 22) ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவியதன் காரணமாக இப்போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
அதேசமயம் மறுபக்கம் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் களமிறங்கும் பாகிஸ்தான் அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக வெல்வதுடன், தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தும் முயற்சியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.