
ஆஃப்கானிஸ்தான் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை வென்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் ஆறுதல் வெற்றியையும் பதிவுசெய்தது.
இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி இலக்கை நோக்கி விளையாடும் போது களநடுவர் நோபால் தர மறுத்தது சர்ச்சையானது. இதனால் இலங்கை அணி அப்போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக கோபமடைந்த இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா போட்டி முடிவுக்கு பின் கள நடுவர் லிண்டன் ஹனிபல்லை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இது ஐசிசி நெறிமுறை விதி 2.13 படி குற்றமாகும். அதாவது போட்டியின் போது வீரர்கள் அல்லது கள நடுவர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள், போட்டி நடுவர் ஆகியோரை தரைகுறைவாக போசுவது அல்லது அவமதிப்பது குற்றமாகும். இதன் காரணமாக இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபாரதம் விதிப்பதுடன், 3 கரும்புள்ளிகளையும் ஐசிசி அபாராதமாக விதித்தது.