
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் வருகின்ற மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகள் தொடங்குவதற்கு 10 நாட்களே உள்ள நிலையில் ஐபிஎல் கொண்டாட்டங்கள் தற்போது களைகட்ட தொடங்க்கிவிட்டன. மொத்தம் பத்து அணிகள் பங்குபெறும் இந்த தொடர் ஐபிஎல் கிரிக்கெட்டின் 16ஆவது சீசன் ஆகும்.
மொத்தம் 74 போட்டிகளைக் கொண்ட இந்த வருட ஐபிஎல் வருகின்ற 31ஆம் தேதி நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியின் மூலம் துவங்குகிறது. கரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று சீசன்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் ஹோம்-அவே என ஐபிஎல் போட்டிகள் பழைய வடிவத்தில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர் .
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஐபிஎல் இன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனம் ஆகும். மேலும் இந்த நிறுவனம் ஹாட் ஸ்டார் என்ற இணையதள அப்ளிகேஷன் மூலமாக போட்டிகளை ஆன்லைனிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளுக்கான வர்ணனையாளர்கள் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.