
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் அளவிற்கு பின் தங்கி உள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 156 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து உள்ளது. இதன் மூலம் இந்திய அணியை விட 47 ரன்கள் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது .இன்னும் கைவசம் ஆறு விக்கெட்டுகள் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 150 ரன்கள் முன்னிலை பெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி குறைந்தபட்சம் 300 ரன்கள் எடுத்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும். இல்லையென்றால் இந்த டெஸ்டில் இந்தியா தோல்வி அடையவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா ஏதேனும் அதிசயம் நிகழ்த்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் இந்திய அணி பந்து வீசும் போது ஜடேஜா செய்த தவறு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்திருக்கும்போது 12 ரன்கள் ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறியது. அப்போது அந்த அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுசாக்னே, ஜடேஜா பந்தில் டக் அவுட் ஆனார். எனினும் அது நோபால் என அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.