
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. மேலும் கடந்த 2011ஆம் ஆண்டிற்கு பிறகு உலகக்கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் இந்திய அணி இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.
அதேசமயம் ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக, கொஞ்சம் பலவீனமாக காணப்பட்ட இந்திய அணி, ஆசியக் கோப்பைக்கு பின்பாக மிக பலமான அணியாகத் தெரிகிறது. அணியின் பேட்டிங் வரிசையில் ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரைத் தவிர வாய்ப்பு பெற்ற அனைவரும் மிகச் சிறப்பாக தங்களது வேலையைச் செய்திருக்கிறார்கள். அதேபோல பந்துவீச்சில் வாய்ப்பு பெற்ற அனைவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.
தற்பொழுது இந்திய அணி உலகக்கோப்பையில் மிக வலுவான பந்துவீச்சு யூனிட்டை கொண்டிருக்கும் அணியாக இருக்கிறது. அதே சமயத்தில் பேட்டிங்கிலும் சிறப்பான ஒரு அணியாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் ஷுப்மன் கில், ஆசிய கோப்பையிலும் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேனாக அசத்தினார்.