
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதனையடுத்து நாடு திரும்ப இருந்த இந்திய அணி வீரர்கள் புயல் காரணமாக வெஸ்ட் இண்டீஸிலேயே தஞ்சமடைந்தனர். இதனையடுத்து பிசிசிஐயின் சிறப்பு ஏற்படின் காரணமாக இந்திய அணி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஆதரவு ஊழியர்கள், பிசிசிஐ அதிகாரிகள் என முழு குழுவும் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலம் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர்.
அதன்படி டி20 உலகக்கோப்பையுடன் டெல்லி வந்தடைந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக விமான நிலையில் ஏராளமான ரசிகர்கள் வழிநெடுவே இந்திய வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மேற்கொண்டு தங்கும் விடுதிக்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு அங்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த நடனக்கலைஞர்களுடன் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவும் நடனமாடி அசத்தினார்.