விராட் கோலி, ரோஹித் சர்மா சாதனையை இருமடங்கு வேகத்தில் உடைத்த சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் அதிவேகமாக 100 சிக்சர்கள் அடித்த இந்தியர் என்ற ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது சாதனைகளை இரு மடங்கு வேகத்தில் உடைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா 3வது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ள இந்தியாவை 2016க்குப்பின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோற்கடித்து முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஆகஸ்ட் 8ஆம் தேதி கயானாவில் நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 159/5 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக பிரண்டன் கிங் 42 (42) ரன்களும் கேப்டன் ரோவ்மன் போவல் 40 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அறிமுக போட்டியில் ஜெய்ஸ்வால் 1, ஷுப்மன் கில் 6 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் 3ஆவது இடத்தில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரத்தில் சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் முதல் முறையாக விஸ்வரூபம் எடுத்து அதிரடியாக விளையாடி 83ரன்களை விளாசி வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.
Trending
அவருடன் திலக் வர்மா தனது பங்கிற்கு 49 ரன்களும் கேப்டன் பாண்டியா 20 ரன்களும் எடுத்ததால் 17.5 ஓவரிலேயே 164/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் 10 பவுண்டரி 4 சிக்சருடன் 83 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
தாமதமாக 30 வயதில் அறிமுகமாகி ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் எதிரணி எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் மைதானத்தின் நாலாபுறங்களிலும் அடித்து நொறுக்கும் ஸ்டைலை கொண்ட அவர், இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரை மிஞ்சிய மேட்ச் வின்னராக அவதரித்துள்ளார். அந்த வரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்து 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸ் எதிராக ஒரு டி20 தொடரில் சந்திக்கும் தோல்வியிலிருந்தும் இந்தியாவை காப்பாற்றிய அவர் இப்போட்டியில் அடித்த 4 சிக்ஸர்களையும் சேர்த்து 100 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர் அதிவேகமாக 100 சிக்சர்கள் அடித்த இந்தியர் என்ற ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது சாதனைகளை இரு மடங்கு வேகத்தில் உடைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
- சூர்யகுமார் யாதவ் : 49 இன்னிங்ஸ்*
- ரோஹித் சர்மா : 84 இன்னிங்ஸ்
- விராட் கோலி : 96 இன்னிங்ஸ்
மேலும் உலக அளவில் சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக 100 சிக்ஸர்களை அடித்த 2வது வீரர் என்ற ஜாம்பவான் கிறிஸ் கெயில் சாதனையும் அவர் சமன் செய்துள்ளார்.
- எவின் லெவிஸ் : 48 இன்னிங்ஸ்
- கிறிஸ் கெயில்/சூரியகுமார் யாதவ் : தலா 49 இன்னிங்ஸ்
- காலின் முண்ரோ : 57 இன்னிங்ஸ்
Win Big, Make Your Cricket Tales Now