
இந்திய அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இலங்கை அணி தொடரை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மேற்கொண்டு 76 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டவுள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் 76 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2,500 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதற்கு முன் முன்னாள் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மட்டுமே இச்சாதனையை படைத்துள்ளனர்.