T20 WC 2024: அகீல் ஹொசைன் சுழலில் சிக்கிய உகாண்டா; விண்டீஸ் இமாலய வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து உகாண்டா அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் பிரண்டன் கிங் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரனும் 3 சிக்ஸர்களுடன் 22 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த் ஜான்சன் சார்லஸ் மாற்றும் கேப்டன் ரோவ்மன் பாவெல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினர்.
Trending
அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜான்சன் சார்லஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் ரோவ்மன் பாவெல் 23 ரன்களுக்கும், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் 22 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த ஆண்ட்ரே ரஸல் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸல் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும், ரொமாரியோ ஷெப்ஃபெர்ட் 5 ரன்களையும் சேர்த்தனர். உகாண்டா அணி தரப்பில் கேப்டன் பிரையன் மசாபா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய உகாண்டா அணியானது முதல் ஓவரில் இருந்தே வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.
அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர் அகீல் ஹொசைனின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வந்தவேகத்திலேயே உகாண்டா அணி வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிலும் குறிப்பாக அந்த அணியில் ஜுமா மியாகியைத் தவிர்த்து வேறெந்த பேட்டரும் இரட்டை இலக்க ரன்களைத் தாண்டவில்லை. இதன் காரணமாக உகாண்டா அணி 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 39 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியாது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அகீல் ஹொசைன் 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேற்கொண்டு அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும், ஆண்ட்ரே ரஸல், குடகேஷ் மோட்டி, ரொமாரியோ ஷெஃபெர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 134 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து குரூப் சி பிரிவு புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now