
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த குயின்டன் டி காக் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் ரீஸா ஹென்ரிக்ஸ் 19 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் 8 ரன்னிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கி அதிரடி காட்டிய டேவிட் மில்லரும் 43 ரன்களுக்கு விக்கெட்டை இழந்த நிலையில், மற்ற வீரர்களும் சொபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.