
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேசம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்க அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ஷயான் ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இறங்கினர்.
இதில் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே ஷயான் ஜஹாங்கீர் வீக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரீஸ் கௌஸ், அதே ஓவரின் ஆறாவது பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இப்படியாக முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையளித்தார்.
அடுத்து களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 22 ரன்களில், மற்றொரு தொடக்க வீரரான ஸ்டீவன் டெய்லர் 24 ரன்களுக்கு, நிதிஷ் குமார் 27 ரன்களுக்கும், கோரி ஆண்டர்சன் 15 ரன்களுக்கும், ஹர்மீத் சிங் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க அமெரிக்க அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.