
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தில் ஐசிசியின் ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில் அதிலிருந்து எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது ஓமன் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிகளில் வெற்றிபெற்று சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியானது நாளை ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றுக்கான் வாய்ப்பை உறுதிசெய்துவிடும்.
இந்நிலையில் முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக தொடரின் பாதியிலேயே விலகியதுடன் மேற்சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார். அதன்பின் ஆஸ்திரேலிய அணி மருத்துவர்களுடன் இணைந்து தனது உடற்தகுதியை மேம்படுத்தியதுடன், டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்றுள்ளார்.