
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முந்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் மூலம் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளில் 7 முறை வெற்றியைப் பதிவுசெய்து சாதனையும் படைத்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42 ரன்களையும், அக்ஸர் படேல் 20 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராவூஃப் மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியிலும் முகமது ரிஸ்வானை தவிர்த்து மற்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் அணியின் நம்பிக்கையாக இருந்த முகமது ரிஸ்வானும் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே எடுத்தது.