அரை சதம் அடித்ததில் மகிழ்ச்சியில்லை - ரோஹித் சர்மா!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் அரைசதம் அடித்தது மகிழ்ச்சியில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 9 பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மா 53, விராட் கோலி 62, சூர்யகுமார் யாதவ் 51 ஆகியோர் அபாரமாக விளையாடியதால், இந்திய அணி 20 ஓவர்களில் 179/2 ரன்களை குவித்தது.
Trending
இலக்கை துரத்திக் களமிறங்கிய நெதர்லாந்து அணியில் ஒருவர் கூட 30 ரன்களை தாண்டவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக டிம் பிரிங்கில் 20 ரன்களை சேர்த்தார். கூப்பர் 9 , ஆக்கர்மென் 17, எட்வர்ட்ஸ் 5 ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக சோபிக்கவில்லை.
இதனால், நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 123/9 ரன்களை சேர்த்து 56 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், அக்ஸர், புவனேஷ்வர், அர்ஷ்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியில் வெற்றிபெற்ற பிறகு பேசிய ரோஹித் சர்மா, ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக மறக்க முடியாத வெற்றியைப் பெற்றப் பிறகு, மீண்டும் வெற்றியைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி. நெதர்லாந்து அணியினர் சிறப்பாக பந்துவீசினார்கள். தொடக்கத்தில் ராகுல் விக்கெட்டை இழந்ததும் நெருக்கடி ஏற்பட்டது. அப்போது என்னுடன் களத்தில் இருந்த கோலி, என்னிடம் வந்து ‘பிட்ச் இன்னமும் பெரிய ஷாட் அடிப்பதற்கு ஏற்றதாக மாறவில்லை பொறுமையாக இரு’ எனக் கூறினார். இதனால்தான், நான் துவக்கத்தில் நிதானமாக விளையாடினேன்.
பவர் பிளே முடிந்தப் பிறகுதான் தூக்கியடிக்க முடிந்தது. அரை சதம் அடித்ததில் மகிழ்ச்சியில்லை. அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பிறகுதான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அடுத்த போட்டிக்கு இப்போதே தயாராக இருக்கிறோம்’’ எனக் கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now