
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது முடிவு எட்டபடாமல் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் நீடித்து வருகின்றனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து அஸ்வினுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வந்த நிலையிலும், அவருக்கான மாற்று வீரர் யார் என்பது குறித்த கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.