தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு ஜோர்டான் ஹர்மான் - லெசெகோ செனோக்வானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லெசெகோ செனோக்வானே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹர்மானுடன் ஜோடி சேர்ந்த ஸுபைர் ஹம்சா சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர்.
இதில் இருவரும் 130 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஸுபைர் ஹம்சா 66 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் மார்கஸ் அக்கர்மேன் 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோர்டன் ஹர்மானும் 71 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரவில்டோ மூன்சாமியும் 5 ரன்களுடன் நடையைக் கட்டினார்.