
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கு தொடர் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் நேற்றைய தினம் நாக்பூர் வந்தடைந்த நிலையில், இன்று தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான படுதோல்வியைச் சந்தித்துள்ள இந்திய அணியானது, இத்தொடரின் மூலம் தங்கள் வெற்றி பாதைக்கும் திரும்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பயிற்சியாகவும் இது அமையும்.