
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணியானது 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
மேலும் கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரு இந்திய அணிக்காக மீண்டும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இப்போட்டியில் ஒருவேளை இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றையையும் படைக்கவுள்ளது.
அதன்படி நாளைய போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தினால், கிரிக்கெட் வரலாற்றில் ஒரு எதிரணிக்கு எதிராக 100 ஒருநாள் வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் படைக்கும். இதுவரை இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 168 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நிலையில் அதில் 99 வெற்றிகளையும், 57 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதேசமயம் 12 போட்டிகள் முடிவில்லாமலும், டிராவிலும் முடிவடைந்துள்ளது.