
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கவும், ரசிகர்களை மைதானத்திற்குள் அழைத்து வரவும் ஐசிசி பல்வேறு முயற்சிகளை செய்தது. டே நைட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை அறிமுகப்படுத்தியது. ஆடுகளங்களை போட்டியின் முடிவு தெரியுமாறு அமைப்பதற்கு கிரிக்கெட் வாரியங்களை வலியுறுத்தியது. மிக முக்கியமாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என உலகக்கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தி வருகிறது.
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கான இறுதிப் போட்டிக்கு இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றன. இங்கிலாந்தில் வைத்து நடத்தப்பட்ட இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றியது.
இதற்கடுத்து இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஓட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் தகுதி பெற்றன. இந்தியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 2-1 எனத் தொடரை கைப்பற்றவும், அதே சமயத்தில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இருந்த இலங்கை அணி நியூசிலாந்து அணி உடனான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடையவும், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதுவதற்கு தகுதி பெற்றது.