இந்தியா - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதி வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் இந்த கோப்பையை தக்க வைத்துள்ளது. மறுபுறம் படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் தொடங்கிய 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தக்க பதிலடி கொடுத்துள்ளது.
அதனால் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்துள்ள அந்த அணி தங்களது நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்து ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக சுழலுக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்த்த கேப்டன் ரோகித் சர்மா 3வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
ஆனால் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே 4.8 டிகிரி அளவுக்கு தாறுமாறாக சுழன்ற இந்தூர் பிட்ச்சில் தாக்குப் பிடிக்க முடியாமல் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 109 ரன்களுக்கு சுருண்ட இந்தியா 2வது இன்னிங்சிலும் 163 ரன்களுக்கு சுருண்டு படு தோல்வியை சந்தித்தது.