
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை கலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வரும் நிலையில், இதில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்குவார்கள் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உறுதியளித்துள்ளார். முன்னதாக இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தொடக்க வீரராக களமிறங்கினார்.
தனது அறிமுக போட்டியிலேயே உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் சாம் கொன்ஸ்டாஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லவும் மிக முக்கிய காரணமாக கொன்ஸ்டாஸ் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.