
இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான் பேட்டரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். முன்னதாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும், ஆனால் பிசிசிஐ அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் படியும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.
இருப்பினும் இன்றைய தினம் விராட் கோலி தனது சமூக வலைதள பதிவின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விராட் கோலியின் இந்த அறிவிப்பானது பல முன்னாள் இன்னாள் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவரான விராட் கோலி தனது ஃபேரவல் டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் ஓய்வை அறிவித்திருப்பது தான்.
தற்போது 36 வயதான விராட் கோலி இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார். இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணிக்கு இது பேரிழப்பாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விராட் கோலியின் ஓய்வு முடிவு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் அவரது கிரிக்கெட் சேவையை கிரிக்கெட் உலகம் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறது.