
சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைப் பெற்ற அணி பாகிஸ்தான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது சமி, வஹாப் ரியாஸ், முகமது ஆமீர், ஜுனைத் கான் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றிருக்கிறது.
இவர்களில் அக்தர் அதிவேகமாக வீசக்கூடிய மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசக்கூடியவர். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் ஆகிய அந்த காலக்கட்டத்தின் தலைசிறந்த வீரர்களை தனது வேகத்தின் மூலம் மிரட்டிய பந்துவீச்சாளர் அக்தர். கடந்த 2003ஆம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நிக் நைட்டுக்கு அக்தர் 161.3 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான், சர்வதேச கிரிக்கெட்டின் அதிவேக பந்து.
அந்த சாதனையை இன்னும் எந்த பந்துவீச்சாளராலும் முறியடிக்கவில்லை. இந்தியாவிலிருந்து சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் வந்திருந்தாலும், அக்தர் மாதிரியான மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இருந்ததில்லை. உம்ரான் மாலிக் தான் 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசக்கூடிய இந்திய பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார்.