
உலக கிரிக்கெட்டில் தற்போதைய காலகட்டத்தில் மிகச்சிறந்த வீரராக திகழ்பவர் இந்திய அணியின் விராட் கோலி. முன்பெல்லாம் சச்சின் டெண்டுல்கர் அவர் விளையாடிய 7, 8 ஆண்டுகளுக்குப் பிறகு தான் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு சாதனைகளை இந்திய அளவில் அல்லது உலக அளவில் படைத்து கொண்டே இருப்பார். அந்த அளவிற்கு அவரது பேட்டிங் தொடர்ச்சியாக சீராகவும் மேலும் குறிப்பிட்ட ஆட்டத்தில் வியக்கத்தக்க வகையிலும் இருக்கும்.
தற்பொழுது சச்சினுக்கு பிறகு அப்படி ஒரு ஆட்டக்காரராக விராட் கோலி திகழ்கிறார். சச்சின் சாதனைகளை இன்னொரு வீரர் எட்டிப் பிடிப்பது என்பது ஆகாத காரியம் என்று கிரிக்கெட் விளையாடிய பல முன்னாள் வீரர்கள் கருதி வந்தார்கள். விராட் கோலி விளையாட வந்து ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கருத்தில் அவர்களுக்கு மாற்றம் உருவானது. அந்த அளவிற்கு விராட் கோலியின் பேட்டில் இருந்து ரன்கள் கொட்ட ஆரம்பித்தது.
இதற்கு நடுவில் 2019 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்திற்கு பிறகு விராட் கோலியின் பேட்டிங்கில் திடீர் சரிவு ஏற்பட அடுத்து மூன்று ஆண்டுகள் அவரால் அந்த எதிர்பாராத சரிவை மாற்ற முடியவில்லை. இதனால் அவரது பல உலக சாதனைகள் தள்ளி தள்ளிப் போயின. இந்த நிலையில் ஆசியக் கோப்பையில் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு சதம் கண்ட பிறகு அவரது பேட்டிங் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது. இதற்குப் பிறகு வழக்கம் போல் மீண்டும் அவரிடம் இருந்து இந்திய மற்றும் உலக சாதனைகள் வர ஆரம்பித்திருக்கின்றன.