
சமகால கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் விராட் கோலி. இவர் இந்திய அணிக்காக 102 டெஸ்ட், 262 ஒருநாள் மற்றும் 107 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தம் 24,078 ரன்கள் எடுத்துள்ளார். 71 சதம் மற்றும் 125 அரை சதங்களை அவர் பதிவு செய்துள்ளார்.
மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரராகவும் போற்றப்பட்டு வருகிறார். அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் சாதனை தடங்களாக அவருக்கு அமைந்துள்ளன. இந்நிலையில், ஹைதராபாத் நகரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் கோலி, 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தார்.
அதன் மூலம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள டிராவிட், சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்த ரன்களை காட்டிலும் கூடுதலாக 14 ரன்கள் எடுத்துள்ளார் கோலி. டிராவிட் மொத்தம் 404 போட்டிகளில் விளையாடி 24,064 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது அதனை முந்தி விராட் கோலி புதிய சாதனைப் படைத்துள்ளார்