Advertisement

என்னுடைய ஃபேவரைட் கிரிக்கெட்டர் என்றால் அது விராட் கோலி தான் - ஷுப்மன் கில்!

தனது கிரிக்கெட் கரியரில் எந்த வீரரை பிடிக்கும்? தான் ஏன் 77 நம்பர் ஜெர்சியை எடுத்துக் கொண்டேன்? என்பது குறித்து சில சுவாரஸ்யமான இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan October 31, 2023 • 20:09 PM
என்னுடைய ஃபேவரட் கிரிக்கெட்டர் என்றால் அது விராட் கோலி தான் - ஷுப்மன் கில்!
என்னுடைய ஃபேவரட் கிரிக்கெட்டர் என்றால் அது விராட் கோலி தான் - ஷுப்மன் கில்! (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 39 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2000-க்கும் மேற்பட்ட ரன்களையும், 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 1000 ரன்களையும், 11 டி20 போட்டிகளில் விளையாடி 304 ரன்களையும் குவித்து அசத்தியுள்ளார். அது மட்டுமின்றி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்துள்ள ஷுப்மன் கில் இளம் வயதிலேயே அடுத்த நட்சத்திர வீரராகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

அதுமட்டுமின்றி 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணிக்காக கோப்பையை வென்ற இந்திய அணியிலும் பிடித்திருந்த அவர் 2018ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் இதுவரை 91 போட்டியில் விளையாடியுள்ள அவர் 2790 ரன்களையும் 3 சதங்களையும் குவித்துள்ளார். இப்படி சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் தொடர் என அனைத்திலுமே சதம் விளாசி அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் சச்சின், விராட் கோலி போன்று இந்திய அணியின் அடுத்த தலைமுறை நட்சத்திர வீரராக ரசிகர்கள் மத்தியில் போற்றப்பட்டு வருகிறார்.

Trending


மேலும் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஆரம்பத்தில் இரண்டு போட்டிகளை டெங்கு காய்ச்சல் காரணமாக தவறவிட்ட அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலிருந்து இந்திய அணிக்கு திரும்பி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

இளம் வயதிலேயே தனது மிகச் சிறப்பான ஆட்டத்தினால் தற்போது அடுத்தடுத்து பல சாதனைகளை படைத்து வரும் ஷுப்மன் கில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது கிரிக்கெட் கரியரில் எந்த வீரரை பிடிக்கும்? தான் ஏன் 77 நம்பர் ஜெர்சியை எடுத்துக் கொண்டேன்? என்பது குறித்து சில சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “தற்போதைக்கு என்னுடைய ஃபேவரட் கிரிக்கெட்டர் என்றால் அது விராட் கோலி தான். அவரையே என்னுடைய முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளேன். என்னுடைய சிறுவயதில் நான் சச்சின் டெண்டுல்கர் சாரின் கிரிக்கெட்டை பார்த்து வளர்ந்திருந்தாலும் தற்போது விராட் கோலியின் ஆட்டத்தால் அதிகளவு ஈர்க்கப்பட்டுள்ளேன். அவரைப் போன்றே தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் முயற்சி செய்து வருகிறேன்” என்று கூறினார்.

மேலும் தனது ஜெர்சி நம்பர் குறித்து பேசிய அவர், “நான் என்னுடைய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டிலேயே 7 என்கிற எண்ணை எடுக்க ஆசைப்பட்டேன். ஆனால் அப்போது அந்த நம்பர் எனக்கு கிடைக்காததால் அதற்கு கூடவே மற்றொரு ஏழை சேர்த்துக்கொண்டு 77 என்ற நம்பரை எடுத்துக் கொண்டதாக” தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement