
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதன்படி இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. மேலும் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
மேலும் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் வீராட் கோலியும், அவரைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் அறிவித்தனர். இந்திய கிரிக்கெட்டின் இருபெரும் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த செய்தியானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வு முடியை அறிவித்துள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 159 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 5 சதங்கள், 32 அரைசதங்கள் என 4231 ரன்களையும், விராட் கோலி 125 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 38 அரைசதம், ஒரு சதம் என 4,188 ரன்களையும் சேர்த்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.