
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றுடனே வெளியேறி ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. மேலும் அந்த அணியின் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளில் சோபிக்க தவறியதே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு முறையும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஃபீல்டிங் மற்றும் கேட்ச்சுகளை தவற விடுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் மீதான விமர்சனங்களை அதிகரிக்கும் வகையில், பாகிஸ்தான் வீரர்களின் புதிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது, அதில் பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் படுக்கை மெத்தைகளை விரித்து கேட்ச்சிங் பயிற்சியை மேற்கொள்ளும் காட்சிகளை காணமுடிகிறது.
வைரலான அந்த காணொளிய்ல் பாகிஸ்தானின் மூன்று-நான்கு வீரர்களையும் காண முடிகிறது. அதில் ஒருவர் அணியின் மூத்த வீரர் இமாம் உல் ஹக். இந்த வீரர்கள் அனைவரும் மெத்தைகளில் ஒருவர் பின் ஒருவராக டைவிங் செய்து கேட்ச்களை பிடிக்க முயல்கின்றனர். இதண் காரணமாக இந்த காணொளி வைரலாக பரவி வருவதுடன், பாகிஸ்தான் ரசிகர்களும் தங்கள் அணியின் இத்தகைய செயல்களால் கடும் கோபத்தில் உள்ளனர்.