
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது சதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்த்து அல் அவுட்டானது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இந்திய அணியானது அஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஷுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும், ரிஷப் பந்தும் 9 ரன்னிலும், ரோஹித் சர்மா 10 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் கேஎல் ராகுல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 84 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ் ரெட்டி இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதனால் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும், நிதீஷ் ரெட்டி 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.