
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி, சேவியர் பார்ட்லெட் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினர். பின்னர் இன்னிங்ஸின் 7ஆவாது ஓவரை சேவியர் பார்ட்லெட் வீசிய நிலையில், ஓவரின் முதல் பந்திலேயே ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் இந்த ஆட்டத்தில் அவர் 4 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்ட நிலையில், பார்ட்லெட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். முந்தைய ஆட்டத்திலேயே விராட் கோலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், இந்த போட்டியிலும் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன்கள் ஏதுமின்றி டக் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பியது அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் ஆட்டமிழந்த காணொளியும் வைரலாகி வருகிறது.