
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஃபர்ஹான ஹக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை திலாரா அக்தர் 13 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய ஷர்மின் அக்தர் 24 ரன்களுக்கும், கேப்டன் நிகர் சுல்தானா ஒரு ரன்னிலும், நஹிதா அக்தர் 19 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தானர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரிது மோனி மற்றும் பஹிமா கதும் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிது மோனி 48 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பஹிமா கதும் 44 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பாகிஸ்தான் மகளிர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்திய சதியா இக்பால் 3 விக்கெட்டுகளையும், ஃபாத்திமா சனா மற்றும் டையானா பைக் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்