
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது தோல்வியைத் தழுவி தொடர்ந்து 7ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷீத் போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது அது கேப்டனின் வேலையை எளிதாக்குகிறது என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இது ஒரு நல்ல ஸ்கோர், இந்த போட்டியின் முதல் 3-4 ஓவர்கள் விளையாட எளிதாக இல்லை. சாய் சுதர்ஷன் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. அதன்பின் எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய வேலையை சிறப்பாக முடித்தனர். அதேசமயம் ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் ஒரு ஆட்ட நாயகனைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருந்தால், அது எங்களுக்கு ஒரு நல்ல பிரச்சனை என்று நினைக்கிறேன்.