
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது.
அதேசமயம் இத்தொடருக்கு முன்னதாக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணியானது, லீக் சுற்றில் அமெரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான தோல்விகளின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுடனே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் மீதும் அந்த வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் பாபர் ஆசாமின் செயல்பாடுகள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்காத வகையில், அவர் மீதான குற்றச்சாட்டுகளும் அதிகரித்துள்ளார். அதிலும் அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் மாலிக், ஒரு படி மேல் சென்று உலகின் எந்தவொரு டி20 அணியின் பிளேயிங் லெனிலும் பாபர் ஆசாம் இடம்பிடிக்க தகுதியற்றவர் என்ற கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்தார். இந்நிலையில், நாங்கள் விமர்சனங்களுக்கு தகுதியானவர்கள் தான் என அந்த அணியின் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.