இத்தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டுள்ளனர் - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் எங்கள் பேட்டர்களை தொடர்ந்து அழுத்ததில் வைத்ததுடன் சிறப்பாக விளையாடினார்கள் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் குசால் மெண்டிஸ், நிஷான் மதுஷ்கா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த மதுஷ்கா 51 ரன்களிலும், சதமடித்து அசத்திய குசால் மெண்டிஸ் 101 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் அதிரடியாக விளையாடியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சரித அசலங்கா 78 ரன்களையும், ஜனித் லியானகே 32 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷுயிஸ், ஆரோன் ஹார்டி, சீன் அபோட் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Trending
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷாட் 2, மெக்குர்க் 9, டிராவிஸ் ஹெட் 18, ஸ்டீவ் ஸ்மித் 29, ஜோஷ் இங்கிலிஸ் 29 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லாலகே 4 விக்கெட்டும் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இலங்கை 2 -0 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை வைட் வாஷ் செய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய குசால் மெண்டிஸ் ஆட்டநாயகன் விருதையும், இத்தொடரில் சிறப்பாக விளையாடிய சரித் அசலங்கா தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஸ்டீவ் ஸ்மித், “கடந்த இரண்டு ஆட்டங்களிலும் நாங்கள் சிறப்பாக விளையாடியுள்ளோம், இங்கு நிறைய வீரர்களைப் பயன்படுத்தியுள்ளோம். நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம், ஆனால் இத்தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களின் பந்து வீச்சாளர்கள் எங்கள் பேட்டர்களை தொடர்ந்து அழுத்ததில் வைத்ததுடன் சிறப்பாக விளையாடினார்கள்.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் அவரின் பந்துவீச்சானது இந்த மைதானத்தில் எங்களின் வாய்ப்பை மேலும் கடினமாக்கியது. இந்த சுற்றுப்பயணத்தில் சில சிறந்த நினைவுகளை நாங்கள் பெற்றுள்ளோம். அதுமட்டுமில்லாமல் அவர்களின் விருந்தோம்பலை நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் சில நல்ல கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now