
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இதுவரை நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும்ம் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நவம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான வெஸ் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியில் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். மேற்கொண்டு தடை காரணமாக முதலிரண்டு டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஆல்ஸாரி ஜோசப் தற்போது மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டு, ஷமார் ஜோசப் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.