
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணியானது ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி நேற்று தொடங்கியது.
மழை காரணமாக இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்ட் நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய பிரதமர் லெவன் அணியில் சாம் கொண்டாஸ் சதமடித்ததுடன் 107 ரன்களையும், ஹன்னோ ஜேக்கப்ஸ் 61 ரன்களையும் சேர்க்க, 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்களையும், ஷுப்மன் கில் 50 ரன்களையும், நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 42 ரன்களை சேர்க்க 46 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.