
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் பஞ்சாப் மொஹாலி பிந்த்ரா மைதானத்தில் இன்று இரவு தொடங்குகிறது. ஆஃப்கானிஸ்தான் அணியை தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரன் வழி நடத்துகிறார். இந்திய டி20 அணிக்கு ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக திரும்பி இருக்கிறார். மேலும் இவருடன் சேர்த்து ரன் மெஷின் விராட் கோலியும் அழைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த அணியில் முக்கிய சேர்க்கையாக இஷான் கிஷான் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சங் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மாவுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பொதுவாக அருகில் எந்த வடிவ உலகக்கோப்பை தொடர் இருக்கிறதோ, அதற்கு எதிர் வடிவத்தில் தான் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். டி20 உலக கோப்பை தொடர் இருக்கின்ற பொழுது, தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டி20 அணியில் தேர்வு செய்யாமல், ஒரு நாள் கிரிக்கெட் அணியில்தான் தேர்வு செய்திருந்தார்கள்.
ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்பில் தென் ஆப்பிரிக்காவில் சதம் அடித்த சஞ்சு சாம்சனுக்கு டி20 இந்திய அணிகளும் இந்த முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இஷான் கிஷான் மனச்சோர்வின் காரணமாக ஓய்வைக் கேட்டு வாங்கி சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என்கின்ற தகவலை அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.