
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியானது இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து எவின் லூயிஸும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையரும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த நிக்கோலஸ் பூரன் - கேப்டன் ரோவ்மன் பாவெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரோவ்மன் பாவெல் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 2 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.