
Sanju Samson: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார்.
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்தப் போட்டிக்கு முன்பு, ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரின் மனதிலும் இருக்கும் மிகப்பெரிய கேள்வி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் 11-ல் இடம்பிடிப்பாரா? என்பது தான்.
இதே கேள்வி இன்றை தினம் நடைபெற்ற கேப்டன்களுகான பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யகுமார், “நாங்கள் அவரை கவனித்து வருகிறோம். அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாளை சரியான முடிவை எடுப்போம்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் நாளைய போட்டியில் சஞ்சு சாம்சன் லெவனில் இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
சஞ்சு சாம்சனைப் பற்றிப் பேசுகையில், இந்த காலண்டர் ஆண்டில் அவர் மூன்று டி20 சர்வதேச சதங்களை அடித்துள்ளார், இதில் இரண்டு தொடர்ச்சியான சதங்கள் அடங்கும். மேலும் இந்திய அணிக்காக 42 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு, 152 க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 861 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும், இந்த ரன்களில் பெரும்பாலானவை தொடக்க வீரராக விளையாடும் போது வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சூழ்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சானுக்கு வாய்ப்பு கிடைக்குமா, அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் எங்கே களமிறக்கப்படுவார் என்ற கேள்விகள் உள்ளன. இதனால் நாளைய போட்டிக்கான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Also Read: LIVE Cricket Score
2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மான் கில் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன, அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்ஸர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.