
இந்திய அணி இந்த ஆண்டு ஆசியக்கோப்பை தொடருக்கு முன்பாக மிகவும் பலவீனமாக கணிக்கப்பட்ட ஒரு அணியாகவே இருந்தது. ஏனென்றால் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரர்கள் நான்கு பேர் காயத்தால் பாதிக்கப்பட்டு, தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திலிருந்து மறுவாழ்வில் இருந்தனர். இதன் காரணமாக இந்திய உலகக்கோப்பை அணியில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்த தெளிவே இல்லாமல் இருந்தது.
மேலும் இந்திய அணியில் யார் எந்த இடத்தில் விளையாடுவார்கள் என்கின்ற தெளிவும் இல்லை. எனவே இந்திய அணி செட்டில் செய்யப்படாத அணியாக இருந்த காரணத்தினால், உள்நாட்டில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றாலும் கூட, புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் முதலில் வந்தால் போதும் என்கின்ற நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் காயத்தில் இருந்து இந்திய முன்னணி நட்சத்திர வீரர்கள் அனைவரும் திரும்பி ஒரே அணியாக சேர்ந்த பொழுது, வெறும் 50 ரன்களில் இலங்கை அணியை சுருட்டி ஆசியக் கோப்பையை கைப்பற்றி வந்தார்கள். அங்கு ஆரம்பித்த இந்திய அணியின் வெற்றிப்பயணம் உலகக்கோப்பையில் இப்பொழுது வரை தொடர்ந்து வருகிறது. நடப்பு உலக கோப்பையில் இந்திய அணி தற்போது விளையாடி உள்ள 10 போட்டிகளையும் வென்று இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது.