மீண்டும் சொதப்பிய இந்திய டாப் ஆர்டர்; கண்முன் வந்த போன 2019 அரையிறுதி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷன், ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பியது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி உலக கோப்பை தொடரில் இன்று தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் வலுவான இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் 50 ஓவர்கள் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு சுமாராக செயல்பட்டு 49.3 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 41, ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 200 ரன்களை இந்தியா அசால்டாக அடித்து நொறுக்கும் என்று எதிர்பார்த்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.
Trending
ஏனெனில் மிட்சேல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே இஷான் கிசான் ஸ்விங் பந்தை கணிக்க முடியாமல் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட்டானார். அதை விட அடுத்த ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா 6 பந்துகளை எதிர்கொண்டு ஹேசல்வுட் வேகத்தில் டக் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.
அதனால் 3.1 ஓவரில் 5/3 என்ற துவக்கத்தை பெற்று தடுமாறிய இந்திய அணியை பார்த்த ரசிகர்களுக்கு 2019 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி தான் நினைவுக்கு வந்தது. ஏனெனில் அந்த போட்டியிலும் மழைக்கு மத்தியில் குறைவான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே ராகுல், ரோஹித், விராட் கோலி ஆகியோர் தரமான ஸ்விங் வேகப்பந்துகளை கணிக்க முடியாமல் தலா 1 ரன்னில் அவுட்டானதால் 3.1 ஓவரில் 5/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியா கடைசி வரை தோனி மற்றும் ஜடேஜாவின் போராட்டத்தையும் தாண்டி தோல்வியை சந்தித்தது.
ஆனால் அந்தப் போட்டிக்கு பின் சரியாக 4 வருடங்கள் கழித்து அடுத்ததாக களமிறங்கிய உலகக் கோப்பை போட்டியில் கொஞ்சம் கூட மாறாத இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதே சொதப்பலை அரங்கேற்றியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதை பார்க்கும் ரசிகர்கள் முன்பெல்லாம் நாக் அவுட்டில் தான் சொதப்பலை செய்வீர்கள் ஆனால் இப்போதெல்லாம் லீக் சுற்றின் முதல் போட்டியிலேயே ஆரம்பித்து விட்டீர்களா? என்று இந்திய பேட்ஸ்மேன்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now