
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதியில் நியூசிலாந்தை தான் எதிர்கொள்ளப் போகிறது என்பது 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. ஏற்கனவே கடந்த முறை 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்து இடம் இந்தியா தோல்வியை தழுவியது. அந்தப் போட்டியில் விராட் கோலி மட்டும் நின்றிருந்தார். ஒருவேளை இந்தியா அப்போது சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கக்கூடும்.
இந்த நிலையில் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நெதர்லாந்துடன் கடைசி லீக் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. இதற்காக வெள்ளிக்கிழமை வீரர்களுக்கான விருப்ப பயிற்சி முகாம் நடந்தது. இதில் விருப்பம் உள்ள வீரர்கள் மட்டும் பங்கேற்கலாம். இந்தியா நியூசிலாந்தை தான் அரையிறுதியில் எதிர்கொள்ளப் போகிறது என்று தெரிந்தவுடன் விராட் கோலி ஓய்வே இல்லாமல் தீவிர பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறார்.
நியூசிலாந்து அணியில் ட்ரெண்ட் பவுல்ட்டின் இடது கை வேகப்பந்துவீச்சு இந்தியாவுக்கு எப்போதுமே சிக்கலை கொடுக்கும். இதற்காக விராட் கோலி ஸ்பெஷல் பயிற்சியில் ஈடுபட்டார். அதே சமயம் நியூசிலாந்து அணியின் லோக்கி ஃபர்குசன் 150 கிலோ மீட்டர் வேகத்தில் ஷார்ட் பாலை வீசி எதிரணியை நிலைகுலைய வைப்பார். இலங்கைக்கு எதிரான போட்டியில் கூட லோக்கி ஃபர்குசன் தன்னுடைய ஷார்ட் பால் ஆயுதத்தை பயன்படுத்தி தான் கடும் நெருக்கடியை கொடுத்தார்.