
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானத்தின் அவுட் - பீல்டு பகுதிகள், அதாவது பிட்ச் அல்லாத வீரர்கள் பீல்டிங் செய்யும் மற்ற பகுதி மிக மோசமான நிலையில் இருந்தது. வீரர்கள் பீல்டிங் செய்ய கீழே விழும் போது அவர்களுக்கு காயம் ஏற்படும் வகையில் இருந்தது அவுட் பீல்டு.
பொதுவாக அந்த பகுதியில் அதிக அளவிலான புற்கள் இருக்க வேண்டும். அந்த புற்களை சரியாக வெட்டி, சிறிய அளவில் தரையோடு, தரையாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். மேலும், மண்ணோடு அந்த புற்கள் வெளியே வரும் வகையிலும் இருக்கக் கூடாது. அப்போது தான் வீரர்கள் பீல்டிங் செய்ய கீழே விழுந்தாலும், அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படாமல் அந்த புற்கள் தடுக்கும்.
மாறாக, தரம்சாலாவில் பல பகுதிகளில் புற்களே காணப்படவில்லை. மண் தரையாகவே சில இடங்கள் காட்சி அளித்தது. அது மட்டுமின்றி, சில இடங்களில் வீரர்கள் பீல்டிங் செய்ய கீழே சறுக்கும் போது மண் அவர்கள் காலோடு பெயர்த்துக் கொண்டு வந்தது. குறிப்பாக முஜீப் உர் ரஹ்மான் பவுண்டரி எல்லை அருகே சறுக்கிக் கொண்டே சென்று பந்தை தடுக்க முயற்சி செய்த போது பெரும் அளவிற்கு மண் பெயர்த்துக் கொண்டு வந்தது. அவரது முட்டி அப்போது தரையில் மோதியது. நல்ல வேளையாக அவருக்கு காயம் ஏற்படவில்லை.